Friday 22 June 2018

பொருண்மையியல் 

முன்னுரை

பொருண்மையியல் என்பது சொற்களின் அல்லது தொடர்களின் பொருளைப் பற்றிய அறிவியல் ஆய்வு. இதில் சொல் அல்லது தொடரைப் பற்றிய பொருள், பொருண்மையியல் தன்மை, பொருள் பற்றிய பொது அறிவு போன்றவை அடக்கம். பொருண்மையியல் அடிப்படையில் பொருளைப் பற்றி பல கோணங்களில் ஆராயப்பட்டன. அதில் அகராதிப் பொருள், சூழல் பொருள் என்பது முதலில் இடம்பெறுகிறது. இவை ஒரே அணுகுமுறையில் ஆராயப்பட்டாலும் பொருண்மை அடிப்படையில் வேறுபடுகின்றன.

 

நேரடிப் பொருளும் சூழல் பொருளும்

நேரடிப் பொருள் என்பது ஒரு சொல் அல்லது தொடரின் உண்மை பொருளாகும். அச்சொல் வழக்கில் இடம்பெறும்போது மாற்றம் பெறாமல் ஒரே பொருளை அனைத்து இடங்களிலும் கொண்டு வரும். இதை அகராதிப் பொருள் என்றும் குறிப்பிடுவர். இதை Chaer (2009) ஐம்புலங்களின் துணையுடன் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதாகும் என்கிறார். அதற்கு எதிர்மறையானதே சூழல் பொருள் என்றும் அவர் வரையறை செய்கிறார்.

சூழல் பொருள் என்பது ஒரு சொல்லோ தொடரோ அது இடம்பெற்றிருக்கும் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதன் பொருள் கண்டறியப்படும். அச்சொற்கள் பிற சொற்களோடு இணைந்து ஒரு பனுவலில் இடம்பெறும்போதும் பயன்பாட்டுச் சூழலில் பயன்படுத்தப்படும்போதும் பொருள் வேறுபாடுகளை ஏற்கும். அவ்வாறு மாற்றம் காண்பவையைச் சூழல் பொருள் என்பர். இருப்பினும், பயன்படுத்தப்படும் சொல்லோ தொடரோ அவ்வாக்கியத்தில் பொருந்தி நிற்கும். அதற்கு மாறாக அமைந்தால் அது வாக்கியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். வாசகர்களை ஈர்க்க இது பெரிதளவில் பயன்படுத்தப்படுகிறது.

 

நேரடிப் பொருள், சூழல் பொருளின் வேற்றுமைகள்

நேரடிப் பொருளுக்கும் சூழல் பொருளுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக அவற்றின் தன்மை, செயல்பாடு, பனுவல் வகை போன்றவை மாறுபடுகின்றன.

அவ்வகையில், நேரடிப் பொருள் வழங்கப்படும் சொல்லுக்கோ தொடருக்கோ எவ்வித உணர்ச்சியும் வெளிபடுத்தாமல் இடம்பெறும். எடுத்துக்காட்டாக, காடு எனும் சொல் இடப்பெயராக அமைகிறது. இது ஓர் இடத்தைக் காண்பிக்கின்றது. இதில் அதைச் சார்ந்த உணர்ச்சிகள் இல்லை மாறாக உள்ளவாறே அமைகிறது. ஆனால், சூழல் பொருள் தனக்கென ஓர் உணர்ச்சியை உடன் கொண்டு வரும். மேலும், அத்தொடர் அல்லது வாக்கியத்தில் மற்றொரு பொருளை உணர்த்தும். எடுத்துக்காட்டாக, அவனுக்கு தலைமுடி காடாய் வளர்ந்திருந்தது. இவ்விடத்தில் காடு எனும் சொல் அதிகமான எனும் பொருள் ஏற்று இடம்பெறுகிறது. இச்சொல் தனக்கென ஒரு பொருளை வாக்கியத்திற்கு ஏற்ப உணர வைக்கின்றது.

சூழல் பொருள் பதிலிடு முறையில் பயன்படும். அதாவது, வேறு பொருளைக் குறித்து வரும். ஆனால், அகராதிப் பொருள் சொல்லியல் முறையில் அகராதியில் இடம்பெறும் பொருளைக் குறிக்கும். மான் என்பது நான்கு கால்கள், கொம்புகள் கொண்ட ஒரு விலங்கினமாகும். இவ்வாறு உள்ளபடி உணர்த்துவது அகராதிப் பொருள். தொடரிலோ வாக்கியத்திலோ அமைந்துமான்போல் ஓடினாள்என்பது துள்ளிக் குதித்து எனும் பொருளை ஏற்று வரும். அவ்விடத்தில் மான் என்பதன் உருவம் மறைந்து அதன் தன்மை வெளிபடுகிறது. எனவே, மற்றொன்றின் பதிலாய் அமைகிறது.

தொடர்ந்து, அகராதிப் பொருள் தரும் சொற்களையோ தொடர்களையோ ஆய்வு அல்லது அறிவியல் கட்டுரைகள், அதிகாரப்பூர்வ பனுவல்களில் காணலாம். சூழல் பொருள்கள் பெரும்பாலும் இலக்கியங்களில் இடம்பெறும். இலக்கியங்கள் பொதுவாகவே எதையும் மிகைப்படுத்தியும் நயமாகவும் சொல்லும் திறன் வாய்ந்ததாக அமைய சூழல் பொருள்களே துணை நிற்கின்றன. அகராதியில் வேறு பொருளை உணர்த்தும் சொல் இலக்கியங்களில் வேறு பொருளைத் தரும். இதையே சூழலுக்கு ஏற்றவாறு பொருள் தருதல் எனலாம்.

ஆகவே, நேரடிப் பொருளும் சூழல் பொருளும் ஒரு சொல்லின் பொருளைக் குறித்து வந்தாலும் பொருளின் தன்மையில் மாற்றம் பெற்று விளங்குகின்றன. பனுவல் வகை, பயன்பாடு, உணர்வு தன்மை போன்றவற்றில் இவை வேறுபடுவது மட்டுமின்றி மற்ற சில கூறுகளாலும் மாற்றம் காண்கின்றன.

 

வேறுபாடுகள்