Monday 19 December 2016


விருந்தோம்பல்

பண்டைய தமிழர்களின் பண்பாட்டில் மிக உயரிய பண்பைக் கொண்டது விருந்தோம்பலாகும். விருந்தோம்பல் என்பது புதியவர்களுகு உணவளித்து உபசரிப்பது ஆகும். பசியென வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உணவளித்த சிறப்பு நம் தமிழர்களையே சேரும். தொல்காப்பியம் தோன்றிய காலம் தொடங்கி இப்பழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகிறது.
‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’
எனும் வரிகள் இக்கூற்றை விளக்குகிறது. இளங்கோவடிகள் 'தொல்லோர் சிறப்பின்' என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியதால் தமிழரின் தொன்மையான பழக்க வழக்கம் என்பதை அறியலாம்.
சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல் கணவன், மனைவியின் தலையாய கடமையாகும் எனக் குறிப்பிடுகின்றனர். வெகு தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் நீண்ட காலத்திற்குத் தேவையான உணவு பொருள்களைக் கொண்டு செல்ல இயலாததால், செல்லும் வழியிலுள்ள வீடுகளில் உணவுகளை எதிர்பார்ப்பர். இவ்வாறு வருபவர்களுக்கு உணவளிப்பர். பசியென்று வருபவர்களை வரவேற்க்க வாசலில் காத்திருந்தவர்கள் சங்க கால தமிழர்கள். இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் உளரா எனப் பார்த்து இருப்பின் அழைத்து வந்து உணவளிப்பர் என்பதை நற்றிணை பாடல் 142-இல் காணலாம்.
'கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
செவியடை தீரத் தேச்சிலைப் பகுக்கும்
புல்லிநன்னாடு '                                                                         (அகம் 311,9-12)
விருந்தினர் இரவில் காலம் கழித்து வரினும் மனம் மகிழ்ந்து விருந்தோம்பினர். இரவில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு நெய் கலந்த இறைச்சியைச் சமைத்துக் கொடுப்பது அன்றைய வழக்கமாகும். பசி என்று வந்தவர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு தாம் மட்டும் வீட்டினுள் அமர்ந்து உணவு உண்ணுதல் சாவதைப் போன்றதாகும் என்கின்றனர் சங்க கால தமிழர்கள். விருந்தோம்பல் முறை என்றும் தமிழர்கள் வகுத்து வைத்திருந்தனர். விருந்தினரிடம் நண்பனைப்போல உறவு கொண்டு, இனிய சொற்களைக் கூறி, கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து, கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்தினரிடம் அன்பு காட்டி எலும்பே குளிரும்படியான அன்பால் நெகிழச் செய்வர்; விருந்தை விருந்தினர் மனம் மகிழும்படி படைப்பர்; பல வகையான உணவினை விண்மீன்கள் போல கிண்ணத்தில் பரப்பி விருந்தினரை அன்போடு நோக்கி, அவர்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுத்து மகிழ்வர். புறநானூறு பாடல் 319-இல் சுட்ட முயலைப் பாணர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்த செய்தியை இப்பாடலில் காணலாம்.
மேலும், வீட்டிற்கு வருவோர்க்கு உணவளித்த பிறகே தான் உணவு உண்ணும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர் நம் பண்டைய தமிழர்கள். மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் உணவளித்துள்ளனர். கோவில்களுக்குச் செல்லும் பெண்கள் யானைகளுக்கு உணவளித்துப் பின், அது எஞ்சிய எச்சில் உணவை உண்டுள்ளனர் என்பதை பரிபாடல் வழி அறியலாம். அதியமான் ஒருநாள் சென்றாலும், இருநாள் சென்றாலும், பலநாள் பலரோடு சென்றாலும், முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினான் என்பதை ஔவையார் பாடல் மூலம் அறியலாம். ஆயர்கள் மாடு மேய்க்கப் புறப்படும்போது உணவினை மூங்கில் குழாயில் இட்டு, மாட்டின் கழுத்தில் கட்டிக்கொண்டு காட்டு வழியே செல்வர் அங்கு யாரும் பசியோடு வந்தால் தாம் மட்டும் உண்பதற்கு வைத்திருக்கும் உணவினை அவர்களுக்குப் பகுத்துக் கொடுப்பர் என்று அறிகிறோம்.
இன்றோ, புதிதாய் வாங்கிய பொருளை எங்கே பக்கத்து வீட்டுக்காரர் கேட்டுவிடுவாரோ என எண்ணி நான்கு சுவரில் அடைந்து கொள்கின்றனர். தற்போதைய காலக்கட்டத்தில் யாசகனுக்கு யாசிப்பவர்கள் எண்ணிக்கையை கைவிட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. இருப்பினும், சில இடங்களில் விருந்தோம்பல் பண்பு இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வடலூரில் இராமலிங்க அடிகள் என்பவர் 23.5.1867-இல் தருமசாலை ஒன்றை நிறுவினார். அங்கு வருவோர்க்கு மூன்று வேளைக்கான உணவுகள் இன்றளவும் பரிமாறப்பட்டு வருகிறது. இராமலிங்க அடிகள் பசியாற்றும் வள்ளலார் எனும் சிறப்பைப் பெற்றவராவார்.