Wednesday 22 May 2019

 

மொழிபெயர்ப்பு   உத்திகள்

மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களைப் பொருள் மாறாமல் மற்றொரு மொழிக்கு அதாவது இலக்கு மொழிக்கு மாற்றுவது மொழிபெயர்ப்பாகும். முந்தைய காலத்தில் மொழியியலாளர்கள் குறிப்பாக மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பு   சுதந்திரமாகச் செயல்படுவது சரியா அல்லது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கப்படுவது சரியா என குழப்பத்திற்குள்ளாகினர். அதில் அவர்கள் வாசகரின் பண்பு, பனுவல் வகை, மொழிபெயர்ப்பின் நோக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாது விவாதம் செய்ததால் ஒரு நிலையான முடிவிற்கு வர இயலவில்லை. அதன் பின்னரே, ஒரு நல்ல மொழிபெயர்ப்பு   மூலமொழி பனுவலின் வகை, மொழிபெயர்ப்பாளரின் கலைச்சொற்கள், பல மொழிபெயர்ப்பு   முறைகளைக் கொண்டு அமைய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்தே மொழிபெயர்ப்பு  த் துறை வளர்ச்சி காண தொடங்கியது.

            பனுவலின் வகையின் அடிப்படையில் மொழிபெயர்ப்பதை கத்திரினா ரேஸிஸ் (1971) என்பவர் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி குறிப்பிடுகிறார். முதலில், தகவல் வகையை (Informative Text) மொழிபெயர்க்க வழிகளைப் பட்டியலிட்டுள்ளார். உண்மை தகவல், பொது அறிவு, கருத்துரைகள் கொண்டிருக்கும் பனுவல்கள் இவ்வகையைச் சேரும் என்கிறார். இவைத் தலைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்திருக்கும். மேலும், ஏரளமான மேற்கோள் கொண்ட கருத்துகளே இடம்பெற்றிருக்கும். பெரும்பாலும், நூலக ஆய்வாக அமையும் கட்டுரைகள் இவ்வகையில் சேரும். இவ்வகை பனுவல்கள் மொழிபெயர்க்கப்படும் பொழுது மூலமொழி பனுவல் முழுமையாக மொழிபெயர்க்கபட்டிருக்க வேண்டும். எவ்வித தகவல்களும் தவிர்க்கப்ட்டிருக்க கூடாது. தேவைப்படும் இடங்களில் விளக்கங்கள் தரப்படலாம். தொடர்ந்து, வெளிப்படையான வகை (Expressive Text) பனுவல்கள் உணர்வு அடிப்படையில் அமைந்திருக்கும். இவ்வகை பனுவல்களின் மொழிபெயர்ப்பில் எழுத்தாளருக்கும் பெறுநருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எழுத்தாளர் உணர்ந்த அல்லது உணர வைக்க முயற்சி செய்யும் உணர்வுகள் இலக்கு மொழி வாசகர்களையும் சென்றடைய வேண்டும். பெரும்பாலும், கவிதை படைப்புகள் இவ்வகை சார்ந்த பனுவலாகும்.

செயல்பாடு பனுவல் வகை என்பது (Operative Text) ஒருவரை ஒரு செயலைச் செய்யத் தூண்டும் வகையில் அமைந்திருக்கும். தொடர்பு கொள்ளும் பனுவல் எனலாம். பொதுவாக, விளம்பரங்கள் இவ்வாறு அமையும். விளம்பரங்களைப் பார்த்துக் கவரப்பட்டு பொருள்களை வாங்கும் பழக்கம் இன்றும் உள்ளது. மொழிபெயர்க்கப்பட்ட பனுவல் இலக்கு மொழி வாசகர்களையும் கவரும் வகையில் இடம்பெறுவதை மொழிபெயர்ப்பாளர் உறுதி செய்ய வேண்டும். ஒலி அமைவு (Audiomedial Text) பனுவல்கள் காட்சி, இசை போன்ற கூறுகளைக் கொண்டு இயங்கும். இப்பனுவல்கள் மொழிபெயர்க்கப்படும்போது இலக்கு மொழியின் பண்பாடு பழக்க வழக்கத்தில் இடம்பெறும் படங்களையும் இசையையும் கொண்டு அமைய வேண்டும்.

பொதுவான வகை பனுவல்களை இலகுவான வகையில் மொழிபெயர்க்கலாம். ஆனால், துறைசார் பனுவல்களைக் குறிப்பிட்ட வகைகளைக் கொண்டு மொழிப்பெயர்க்க முடியும். எடுத்துக்காட்டாக, சட்ட வகை பனுவல்களுக்குச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்புப் பயன்படுத்தப்படும். சட்டம் சார்ந்த சில சொற்களுக்கு இணையான நிகரன்கள் இல்லாத வேளையில் கடன் பெறுதல் நிகழும். அறிவியல், பொருளாதார பனுவல்களை மொழிபெயர்க்கும்போது துறைசார் சொற்களுக்கான நிகரன்கள் இல்லாவிடின் கடன் பெறுதலும் விளக்கம் தரும் தொடர்களோ வாக்கியங்களோ இணைத்து மொழிபெயர்ப்புச் செய்யப்படும். இவ்வாறு ஒவ்வொரு பனுவலுக்குப் பொருந்தும் வகையில் மொழிபெயர்ப்பு உத்திகள் அமைகின்றன.

எனவே, அனைத்து மொழிபெயர்ப்புகளும் ஒரே உத்தியைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கப்படுவதில்லை. நோக்கம், வாசகர் போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு மொழிபெயர்ப்புகள் செய்யப்படுகின்றன.