Sunday 25 June 2017


கொல்லாமை

 

முன்னுரை

திருக்குறள் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்ட குறளடி செய்யுள். இடம்பெற்றிருக்கும். வள்ளுவர் இயற்றிய 1330 குறள்களும் முதல் அடியில் நான்கு சொற்கள், இரண்டாம் அடியில் மூன்று சொற்கள் எனும் அமைப்பைக் கொண்டிருக்கும். 133 அதிகாரங்களைக் கொண்டுள்ள திருக்குறளிள் கொல்லாமை’ 33ஆம் அதிகாரத்தில் இடம்பெறுகின்றது.

 

சொல் விளக்கம்

கொல்லாமை என்பது கொல் + ஆமை எனும் இரு சொற்களின் கூட்டாகும். கொல்லாமை என்பது உயிரை அழித்தல், வதைத்தல் கூடாது எனும் பொருளை உணர்த்துகிறது. கொல்லாமை என்பதை அனைத்து உயிர்களின்மேல் கருணை காட்டுவது என்றும் வரையறை செய்யலாம்.

அமைப்பு

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் கொல்லாமை எனும் கருப்பொருள் அறம் எனும் பால்வகையின் கீழ் அடக்கம். அறம் என்பது பிறருக்கு உதவுவதாக மட்டும் கருதப்படாமல் மனித இனத்திடம் இருக்க வேண்டிய அனைத்து பண்புகளைப் பற்றிய ஒரு தொகுப்பு எனலாம். எனவே, வள்ளுவர் கொல்லாமையை மனிதன் கட்டாயமாக அறிய வேண்டிய பண்பாகக் கருதுகிறார்.

அறத்துப்பாலின் கீழ் நான்கு இயல்கள் உள்ளன. அவை, பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் எனப்படும். இதில், கொல்லாமை துறவறவியல் எனும் இயலில் இடம்பெற்றுள்ளது. துறவறவியலை, துறவு + அறம் + இயல் எனப் பிரிக்கலாம். துறவு என்பது பற்றொழித்தல் எனப்படும். அதாவது, ஒரு பொருள் அல்லது ஒரு நபரின் மீதுள்ள பற்று, பாசம், அன்பு போன்றவற்றை ஒழித்து மனத்தில் எவ்வித அன்பையும் சுமக்காமையாகும். அறம் என்பது ஒழுக்கம் எனப்படும். இயல் என்பதை இலக்கணம் என வரையறை செய்யலாம். எனவே, துறவறவியல் பற்றொழிக்கும் ஒழுக்கத்திற்கு இலக்கணம் எனலாம். கொல்லாமை எனும் அதிகாரத்தை வள்ளுவர் இவ்வியலில் இடம்பெற செய்திருப்பது துறவறத்திற்கு முரணாகத் தெரியலாம். அதாவது, உலகிலுள்ள அனைத்தின்மேலும் அன்பைத் துறந்த ஒருவர் எவ்வாறு ஓர் உயிரைக் கொல்லாது காக்க நினைப்பார்? ஆனால், இந்நிலையில் இறைவனை நோக்கிய பயணமாகக் கருதப்படும் துறவறம் மேற்கொள்பவர்கள் பசியின்றி இருப்பதோடு இறைவனின் படைப்பில் அனைத்தையும் சமமாகக் கருதி உயிர்க் கொல்லாமையை ஆதரிப்பர். ஆகவே, திருக்குறளில் கொல்லாமை எனும் அதிகாரம் அறத்துப்பாலில் துறவறவியலில் இடம்பெற்றிருப்பது மிகப் பொருந்தும்.

பொருள்

321 முதல் 330 வரையில் கொல்லாமை அதிகாரத்தின் குறள்கள். முதல் குறள்,

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும் (321)

அறமாகிய செயல் எஃது என்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாமையாகும். கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைவிக்கும் எனும் பொருளைக் கொண்டு வருகிறது. கொல்லாமையைக் கடைபிடிக்காத ஒவ்வொருவருக்கும் மற்ற வினைகள் யாவும் வந்து சேரும் என மனிதர்கள் மனத்தில் ஒரு பயத்தை இக்குறள் பதிக்கின்றது. அதிகாரத்தின் முதல் குறள் கொல்லாமை என்பதன் பொருளை உணர்த்தி கொல்லுதலின் விளைவு பற்றி விளக்கும் குறளாக இடம்பெற்றுள்ளது. விளைவுகளைப் பற்றிய விளக்கம் மனிதர்களிடத்தில் அச்சத்தை உருவாக்கி அவர்கள் கொல்லுதலைக் கைவிட துணை செய்யும் என்பதாலே அச்சூழலை அதிகாரத்தின் முதல் குறளில் வள்ளுவர் வைத்துள்ளார்.

            தொடர்ந்து, கொல்லாமை அதிகாரத்தின் இரண்டாம் குறள் வேறு வகையான உயிர்க் கொல்லுதலைப் பற்றி பேசுகிறது. பொதுவாக, ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொல்வதற்குக் கூர்மையான ஆயுதங்கள், கொடிய மருந்துகள், காட்டு விலங்குகள் போன்றவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், வள்ளுவர் மனித வாழ்வில் இயல்பாய் நடந்து மற்றொரு உயிரைக் கொல்லும் வல்லமையுள்ள ஒரு நிகழ்வைப் பற்றி இக்குறளில் குறிப்பிடுகின்றார். கொலை மட்டுமின்றி பல முறைகளில் ஓர் உயிர் பிரிகிறது. அதில் முக்கியமானது பசி. பசி பினியை விட கொடியது ஏதுமில்லை என்பர். பசி ஒரு மனிதனின் உயிரை எடுக்கும் திறன் மிக்கது. எனவே, தனக்குக் கிடைத்த உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும் என அத்திருக்குறள் வலியுறுத்துகிறது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
(322)

எனும் குறள் கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்கிறது. பகிர்ந்துண்ணுதல் பற்றி ஈகை எனும் அதிகாரத்திலும் பேசப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வியலில் பகிர்ந்துண்ணுதலால் ஓர் உயிரையே காப்பற்றலாம் எனும் உண்மை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
(323)

எனும் குறள் இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது எனக் குறிப்பிடுகின்றது. அதாவது, அற நெறியில் கொல்லாமை முதன்மை வகிக்கின்றது. பொய் கூறுவதை முற்றிலுமாக மறுக்கும் நம் சமுகத்தில் பொய்யாமை இதற்குப் பின்னுள்ளது. சுருங்கக் கூறின், மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படும் பொய்யாமையைக் காட்டிலும் கொல்லாமை உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி
(324)

எனும் குறள் எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறி அறநூல்களில் சொல்லப்படும் நல்ல வழி எனும் பொருளை உணர்த்துகிறது. அறநூல்கள் என்பதே ஒரு மனிதன் போற்றி புகழ வேண்டிய நூல்களாகும். அதில் கொல்லாமை என்பதே மிகச் சிறந்த நல்வழியாகக் கருதப்படுகிறது. எனவே, அனைவரும் நிச்சயம் கொல்லுதலை மறுக்க வேண்டும் என்பதையும் வள்ளுவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை (325)

எனும் குறள் வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன் என்கிறது. இக்குறள் துறவறம் எனும் கருப்பொருளைக் கொண்டு அமைந்துள்ளது. துறவம் மேற்கொண்டவர்களைக் காட்டிலும் கொலை செய்யாது வாழ்பவர்கள் மேலானவர்கள் என்கிறார் வள்ளுவர். துறவறம் என்பது இறைவனை மட்டுமே சிந்தித்து வேறு எந்த அழுக்கும் இல்லாமல் மேற்கொள்ளும் புனித பயணம் என்பர். அத்துணைப் புனிதமாகக் கருதப்படும் துறவறம் செல்பவர்கள் கொல்லாமையைக் கடைப்பிடிக்கும் மனிதர்களினும் சிறந்தவர்களாகக் கூறப்படுகிறார். இறைவனைச் சென்றடைய துறவறம் மட்டுமே வழியல்ல. கொல்லாமையும் அதற்கு வழிவகுக்கும் எனப் பொருள் கொள்ளலாம். இதையே இராமலிங்க சுவாமிகள் கடைப்பிடித்து அணுவாக மாறி மறைந்தார்.

தொடர்ந்து, கொல்லாமை என்பதை வழக்கப்படுத்திய ஒருவனை இறப்பும் நெருங்கி வர மறுக்கும் எனப்படுகிறது. அவன் செய்து வரும் இந்நல்ல செயலைக் கண்டு வியந்து  இறப்பும் அவனை நெருங்கி வராது என்கிறார் வள்ளுவர். பிறர் உயிரை எடுக்காத அவனின் உயிரை எடுக்க மன வராமலும் அவனின் நல்லுணர்வை மதித்தும் எமனானவன் தூரம் சென்றுவிடுவானாம்

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று (326)


தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை (327)

உயிரே போகும் சூழலில் இருப்பினும் வேறொரு உயிரைக் கொல்லுதல் கூடாது எனவும் பிற உயிரைக் கொன்று தன் உயிரைக் காக்கக் கூடாது எனவும் இக்குறள் வழி அறியலாம். அதாவது, தன் உயிரைப் பிற உயிருக்கு மேலாக நினைக்க கூடாது. மாறாக, உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் சமமாக எண்ண வேண்டும். அனைத்து உயிரையும் சமமாக எண்ணும் ஒருவன் மட்டுமே தன் உயிரைக் காக்க பிற உயிரை எடுக்கும் எண்ணம் கொள்ளமாட்டான். இந்நிலையில் வள்ளுவர் தன் உயிரைக் காட்டிலும் பிற உயிரை மேலாக நினைக்க வேண்டும் என்பதைப் பதிவு செய்யவில்லை. எனவே, உயிர்களைச் சமமாக் கருதி காப்பாது சிறந்தது. தன் உயிரைக் கொடுத்துப் பிற உயிரைக் காப்பது உயர்ந்த செயலாக இருப்பினும் இக்குறளில் அதை எடுத்துரைக்கவில்லை.

    கொல்லுதலால் ஒருவனுக்கு நன்மை கிடைப்பதில்லை. ஒரு கோழியின் உயிரைப் பறிப்பதால் பண்ணைக்காரனுக்கு ஊதியம், மனிதனுக்குத் தேவையான கொழுப்பு சக்தி எனப் பல நன்மைகள் இருந்தாலும் அறிவுடையோனுக்கு அது இழிவான செயலாகும் என்கிறது அடுத்தக் குறள். கொல்லாமை என்பதில் திளைத்த ஒருவன் ஒரு சிறு பூச்சியாக இருந்தாலும் அதை கொல்ல தயங்குவான். அவ்வகையில் ஓர் உயிரை அழிப்பது மிக பலனுடையாக இருப்பினும் அது சான்றோர் மத்தில் மனிதநேயமில்லா செயலாக மட்டுமே கருதப்படும்.  எனவே,

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை
(328)

எனும் குறள் கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும் என்கிறது.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
(329
)        

எனும் ஒன்பதாவது குறள் கொலை செய்வதை தொழிலாகவும் அதன் வழி ஊதியம் ஈட்டுபவர்களை மனித இனத்தால் மிகவும் இழிவாகப் பார்க்கப்படுகிறது என்கிறது. அதுவே அவர்களுக்கான ஒரே வழியாக தோன்றினாலும் நல்வழியில் ஈட்டப்படும் ஊதியமே மக்களால் வரவேற்கப்படுகிறது.

அதிகாரத்தின் இறுதி குறளான

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர் (330)

எனும் குறள் நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர் எனக் குறிப்பிடுகிறது.

முடிவு

            ஆகவே, கொல்லாமையை முற்றிலுமாக மறுக்கும் சிந்தனைகளை மனிதர்களுக்குள் விதைக்கும் வண்ணம் செரிவான பத்துக் குறள்கள் படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் கொல்லாமை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தவே இது தனி ஓர் அதிகாரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் அவசியத்தை மனிதர்களுக்கு எடுத்துரைக்க முதல் பால்வகையில் இது இடம்பெறுள்ளது.