Thursday 15 February 2018


பழந்தமிழர் வாழ்வில் அமல்படுத்தப்பட்ட வணிக மேலாண்மை
 
முன்னுரை
            ‘Civilization’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நகர்ப்புறத்துத் திருந்திய வாழ்வு என்று பொருள் படுவதாக அறிஞர் பாவாணர் கூறுகின்றார். இலத்தீன் மொழியில் ‘Civitas’ என்பது நகரம் எனும் பொருளைக் குறிக்கின்றது. எனவே, நாகரீகம் என்பது நகர வளர்ச்சி என்று சொல்லலாம்; நகர வளர்ச்சி நாகரீகத் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. சிந்து, தைகிரிசு, கங்கை, காவிரி, வைகை, பேரியாறு போன்ற கரை ஓரங்களில் தோன்றியவையே நாகரீகங்கள். மெசாபொட்டாமியா, மெசிர் புர்பா, இந்துஸ், ஹுவாங் ஹோ எனும் நான்கு நாகரீங்களே உலகில் முதலில் தோன்றிய நாகரீங்களாகும். உலகின் முதல் மூன்றாவது நாகரீமாகத் தோன்றியது நம் தமிழர் நாகரீகமே. கி.மு 200000 முதல் கி. 50000 வரையில் குமரிக்கண்டம் எனும் இடத்தில் தமிழர் நாகரீகம் தொடங்கியது என்று பல வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன. நாகரீகம் என்பது உடை, உணவு, உறையுள், பொருளாதாரம், சிற்பம், ஓவியம் போன்ற மனிதர்களின் புறவளர்ச்சியைக் குறிப்பதாகும். நாகரீகத்தோடு ஒன்றி வளர்ந்தது பண்பாடாகும். பண்பாடு மனிதனின் அகவளர்ச்சியைக் குறிப்பதாகும். எனவே, புறவளர்ச்சியும் அகவளர்ச்சியும் இணைந்ததே ஒரு மனிதனின் முழுமையான வளர்ச்சியாகும்.
அதில் ஒரு மனிதன் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையாக அமைந்தது பொருளாதாரமே. தமிழர் வாழ்வில் தொடக்கத்தில் இருந்து ஒன்றாய்ப் பிணைந்திருந்தது வேளாண்மையே. தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு எஞ்சிய இருந்த பொருள்களைப் பிறரிடம் பகிர்ந்து கொடுத்தனர். இவ்வாறு தொடங்கியதே பண்டமாற்று வணிகம். எனவே, பழந்தமிழர் எனக் குறிப்பிடப்படும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் வாழந்த தமிழரின் வாழ்வில் விவசாயமும் வணிகமும் மேலோங்கி இருந்ததைக் காணலாம். பழந்தமிழர் வாழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் என்றிருந்துள்ளன. இவற்றுள் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமான வணிக மேலாண்மை குறித்த சிந்தனைகளைச் சங்க இலக்கிய பாடல்களில் காணலாம்.  
மேற்குறிப்பிடப்பட்டது போல், பழந்தமிழர் வாழ்வில் வணிகம் பண்டமாற்று முறையிலே தொடங்கியது.
கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும் ஆய் மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய

ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகத்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
எனும் புறநானூற்றுப் பாடலின் வழி பண்டமாற்றுமுறையில் வணிகம் நடந்ததைப் பற்றி அறியலாம். இப்பாடல் வரிகளில் மான் இறைச்சியுடன் வரும் வேடனும், தயிரைக் கொண்டு வரும் ஆயர் குலப் பெண்ணும் அவற்றைக் கொடுத்துவிட்டு, நெல்லைப் பெற்றுக் கொண்டு செல்வர் என்று குறிப்பிடுகிறது. அதிலும், மான் இறைச்சியைக் கொண்டு வரும் தட்டிலே நெல்லைப் போட்டுத் தருவர். அளவில் சிக்கல் இல்லாமல் வணிகம் நடக்க இவ்வழிமுறை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறே தயிர் கொண்டு வரும் பானையிலே ஆயர் குலப் பெண் நெல்லைப் பெற்றுச் செல்வாள். இப்பாடலின் மூலம் முறையான, எந்நிலை சாராப் பண்டமாற்று முறை நடந்திருப்பதை உறுதிச் செய்யலாம்.

வணிக மேலாண்மை
கடல் தோறும் தமிழ் கலங்கள், துறைதோறும் தமிழ் வணிகத் தடங்கள்”. தமிழர் வாழ்வில் வணிகத்தைச் சிறப்பாக வழிநடத்தினர் என்பதை யாராலும் மறுக்க இயலாது. வணிக மேலாண்மை என்பதை நிர்வாகத் திறன் எனுவும் குறிப்பிடலாம். பழந்தமிழர் வணிகத்தில் சிறந்து விளங்கப் பல யுத்திகளைக் கையாண்டனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம், போக்குவரத்து வசதி, போக்குவரத்திற்கான முறையான வழிமுறைகள், நாணயப் பயன்பாடு, துறைமுகத் தோற்றமும் வளர்ச்சியும், வெளிநாடுகளுடான தொடர்பு, அத்தொடர்புகளின் வலிமை, வணிகப் பொருள்கள் என பல கூறுகளைச் சீரான முறையில் கையாண்டு வணிகத்தில் சிறந்தனர்.
பழந்தமிழரின் வணிகம் வெளிநாடுகள் வரையில் பரவியிருந்தது குறிப்பிடதக்கது. கிறிஸ்து பிறப்பிற்குப் பன்னூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் மேற்கில் கிரீசு, உரோம், எகிப்து முதல் கிழக்கில் சீனம் வரை கடல் வழி வணிகம் செய்துள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் அயல்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பைப் பட்டினப்பாலை என்னும் பத்துப்பாட்டு இலக்கியம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு
மொழி பல பெருகிய பழிதீர் தேயத்துப்
புலம்பெயர்
மாக்கள் கலந்தினிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்.
எனும் பாடல் வரிகள் பல மொழிகள் பேசுபவர்கள் ஓரிடத்தில் கூடி பேசி மகிழும் ஒரு பட்டினத்துச் சூழலைக் கொண்டு இடம்பெற்றுள்ளது. மேலும், எகிப்தில் கி.மு. 15-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட இலவங்கப்பட்டை சேரநாட்டிலிருந்து அனுப்பப்பட்டவை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அரிசி, இஞ்சி, தோகை முதலிய தமிழ்ச்சொற்கள் ஹிப்ரு மொழியில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழக வணிகர்கள் மிளகு வியாபாரத்தில் ஈட்டிய பெருஞ்செல்வத்தைப் பற்றியும், ரோமாபுரிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பைப் பெரிபுளுசு, பிளினி போன்றோர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாலஸ்தீனம், மெசப்பொடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடனும் பழங்காலத்தில் தமிழர்கள் வாணிகத் தொடர்பு வைத்திருந்தனர். ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு போன்ற தமிழர் உணவு பழக்கத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் பொருள்கள் மேற்காசிய நாட்டு மக்களின் பயன்பாட்டில் இருந்ததாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கி.மு 1490-இல் யூதர்களின் தலைவரான மோசஸ் நடத்திய சமய வழிபாடுகளில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் எனப் பழைய ஏற்பாடுஎனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
20 மே 1498-இல் வெள்ளிக்கிழமையன்று இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் பொர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கொழிக்கோடு வந்த நிகழ்வுதான் ஐரோப்பாவிலிருந்து போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என பல நாட்டினர் இந்தியாவிற்கு வந்து வணிகம் செய்யவும் இந்தியாவுடன் வணிகம் தொடர்பு வைத்துக் கொள்ளவும் முடிந்தது. பழந்தமிழர்கள் பாபிலோனியாவுடன் வணிக தொடர்பு வைத்துள்ளதை வரலாற்றுச் சான்றுகளின் மூலம் அறியலாம். முரஷு என்பவர் நிப்பூர் என்ற இடத்தில் நடந்த வணிகத்தை ஒரு களிமண் ஏட்டில் எழுதியுள்ளார். அதில் கணிமண்ணேடுகள் சிலவற்றில் பாபிலோனியர் தமிழக வணிகருடன் கொண்டிருந்த வணிகத்தைப் பற்றிய கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ வணிகர்கள் அங்கேயே தங்கி வணிகமும் கைத்தொழில்களையும் மேற்கொண்டததற்கான சான்றுகளும் இவ்வேடுகளில் காணலாம்.
பழந்தமிழர்கள் எகிப்துடன் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பிருந்து வணிக தொடர்பு வைத்திருந்ததைஎரித்திரியக்கடலின்  பெரிப்ளூஸ்’ எனும் நூலில் இடம்பெற்ற எச். டபிள்யூஸ்காபி என்பரின் பதிப்புரையின் வழி அறியலாம். மஸ்லின் துணி, ஏலம், இலவங்கம் போன்ற வாசனைப் பொருள்கள் தமிழகத்திலிருந்து எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தொடக்கக் காலங்களில், நம் பழந்தமிழ் வணிகர்கள் ஏற்றுமதி பொருள்களை மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவிற்கு இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர். அங்கிருந்து அப்பொருள்களை அராபிய வணிகர்கள் எகிப்திற்குக் கொண்டு சென்றனர். கி.மு 1500 முதல் 1350-இல் எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்ட தந்தத்தினாலான பொருள்கள் தமிழகத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கி.மு நாலாயிர ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையே வணிகம் நடந்துள்ளது என சேஸ் என்பர் 1887-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிப்பர்ட் எனும் சொற்பொழிவின் போது குறிப்பிட்டுள்ளார். இதற்குச் சான்றாகச், சுமேரியாவில் ஊர் எனும் இடத்தில் சந்திரபகவானுக்குக் கட்டப்பட்ட கோயிலை அடையாளமிடுகின்றனர். இக்கோயில் கி.மு மூவாயிரத்தில் அழிந்துவிட்டது. அதில் தேக்கு மரத்தினாலான துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்தூண்டின் வயது ஐயாயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே, கி.மு மூவாயிர ஆண்டுகள் முன்னர் தொடங்கி  தமிழர்கள் தேக்குமரங்களை ஏற்றுமதி செய்தனர் எனவும் தென்னிந்தியாவுக்கும் மடகாஸ்கருக்குமிடையே வணிகத் தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிய வருகின்றது.
அதுமட்டுமின்றி, தமிழகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பலவகையான பண்டங்கள் ஏற்றுமதியாயின. யவனர்கள் வழி ஐரோப்பாவில் பல பாகங்களுக்குத் தமிழக பொருள்கள் வணிகம் செய்யப்பட்டன. மேலும், கி.மு ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கர்கள் தமிழகத்துடன் வணிகம் செய்யத் துவங்கினர். அதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ ஆண்டு தொடங்கி முதல் சில நூற்றாண்டுகளில் ரோமாபுரியுடன் பழந்தமிழர்களின் கடல் வணிகத் தொடர்பு வளர்ச்சி கண்டது. கிறிஸ்துவ ஆண்டிற்கு முன்பே இவர்களின் வணிகத் தொடர்பு தொடங்கியிருந்தது. ஆனால், அரசியல் காரணமாக வளர இயலாம போனது. இருப்பினும், கிறிஸ்துவக்குப் பின் இந்நிலை மாறியது. இதற்குச் சான்றாகப், பண்டைய தமிழகத்தின் கடல் வாணிகத்தைப் பற்றிய சான்றுகள் ரோமாரியர்கள் எழுதிய சில நூல்களின் மூலம் அறியலாம். எடுத்துக்காட்டாக, ஸ்த்ராஓ என்பர் பூகோளம் எனும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். கி.பி 60-இல் எரித்திரியக் கடலின்  பெரிபுளூஸ்) Periplus of the Erithraean Sea) எனும் நூலும் ரோமாரியரால் எழுதப்பட்டுள்ளது. கி.பி 70-இல் பிளினி என்பர் உயிரியல் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தாலமி என்பர் பூகோள நூலை எழுதியுள்ளார். கிடைக்கப்பெற்ற இந்நூல்களில் பண்டைய தமிழர்களின் வாழ்க்கைச் சூழலும் அவர்களோடு ரோமாபுரிக் கொண்டிருந்த வணிகத் தொடர்பும் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்நூல்களின் சொல்லப்பட்ட தமிழரின் வாழ்க்கை முறையும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டப்பட்டவையும் ஒன்றி வருகிறது. அதுமட்டுமின்றி, இந்நூல்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட்ட அகழ்வாராய்ச்சியில் ரோமாபுரியின் நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பழந்தமிழர்கள் நாணய பயன்பாட்டுடைய நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததைப் பார்க்கும் போது பழந்தமிழரின் வணிகத்திலும் நாணய பயன்பாடு இருந்திருக்கும் எனக் கொள்ளலாம். இது தமிழர்கள் மற்றொரு வணிக மேலாண்மையைக் காட்டுகிறது.
பழந்தமிழர்கள் கீழை நாடுகளுடனும் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் என்பது அண்மையில் பிலிப்பீன் தீவில் நடத்தப்பெற்ற அகழ்வாராய்ச்சின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. கி.மு முதலாம் நூற்றாண்டில் தமிழர்கள் பயன்படுத்திய கத்திகள், கோடாரிகள், ஈட்டிகள் போன்ற இரும்புக்காலப் பொருள்கள் அங்கு கிடைக்கபெற்றுள்ளன. இவை அங்குள்ளவர்களுடன் தமிழர் வைத்திருந்த வணிகத் தொடர்பை பெய்படுத்துகிறது.
வேறுபல நாட்டிற் கால்தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
எனும் நற்றிணை பாடல்லுக் ஏற்பதமிழர்கள் ஏற்றுமதி மட்டுமின்றி வெளிநாடுகளில் உற்பத்தியான பொருள்களை இறக்குமதியும் செய்துள்ளனர். கீழைநாடுகளான சீனம், மலேசியா, வடபோர்னியா ஆகிய நாடுகளுடன் தமிழர்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வணிகத் தொடர்பு கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. கி.மு ஏழாம் நூற்றாண்டுகளில் தமிழகப் பொருள்கள் சீனாவில் இறக்குமதியாயின. அதுபோன்றே, தமிழர்களும் சீனா நாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்ததை வரலாற்றுச் சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து பட்டாடைகள், சீனியும் தமிழகத்தில் இறக்குமதியாயின. அதுமட்டுமின்றி, இன்றளவும் தமிழகத்தில் சீனக் கற்பூரம், சீனக் கருவா, சீனக் களிமண், சீனக் காரம், சீனக் கிழங்கு, சீனக் கிளி, சீனக் குடை, சீனச் சட்டி, சீனர் சரக்கு, சீனச் சுக்கான், சீனச் சுண்ணம், சீனத்து முத்து, சீன நெல், சீனப் பட்டாடை, சீனப் பரணி, சீனப் பருத்தி, சீனப்புகை, சீனப் புல், சீன மல்லிகை, சீன மிளகு, சீன ரேக்கு, சீன வங்கம், சீன வரிவண்டு, சீனாக் கற்கண்டு, சீனாச் சுருள் போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன. மேற்கு நாடுகளிலிருந்து உயர்வகை மது, கண்ணாடிப் பொருள்கள், அரெபியக் குதிரைகள், ரோமனிய மாலை போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
நிலவணிகர்கள் வணிகப் பொருள்களை எருது, கழுதை போன்றவற்றின் மேலேற்றிக் கொண்டு கூட்டம் கூட்டமாக தரைவழி வெகுதூரம் பயணம் செய்து வட நாடுகள் வரை சென்று வணிகம் செய்தனர். யவணர்கள் அல்லது கொள்ளையர்களைத் தவிர்க்க இவர்கள் கூட்டமாகச் சென்றுள்ளனர். இவ்வாறு கூட்டாமாய்ச் செல்பவதைச் சாத்து என்பர். பழந்தமிழ் வணிகர்கள் தரைவழியிலும் பொருள் ஈட்டியுள்ளனர் என்பதை இதன் வழி அறியலாம். இதற்குச் சான்றாகச், சிலப்பதிகாரத்தில் கோவலன் வணிகக் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே சென்று துன்பப்படும் போதுசாத்தோடு போந்து தனித்துய ருழந்தேன்எனும் வரி இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமின்றி, மன்னர்கள் மக்களின் வணிக மேம்பாட்டிற்காகத் துணை புரிந்துள்ளனர். கொள்ளையர்களைத் தடுக்கவும் பாதுகாப்பிற்காகவும் அச்சாத்துகளுடன் காவாலாளிகளையும் அனுப்பியுள்ளனர்.
நிலப்பகுதியில் அடர்ந்த காடுகள் இருந்ததால், அதில் பயணம் செய்வது சிரமம் என்று கருதிய நம் பழந்தமிழர்கள் கடல் வழி பயணத்தை மேற்கொண்டனர். எனவே, தமிழர்கள் பழங்காலத்தில் கடல்வழியாக மரக்கலங்களைப் பயன்படுத்தி பிற நாட்டினரோடு வணிகத்தில் ஈடுபட்டனர். கடல்வழி பயணமும் கடலைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காணலாம். மேலும், கடல் மற்றும் கப்பலுக்கான பல சொற்கள் பயன்பாட்டி இருந்ததையும் காணலாம். கடலைக் குறிப்பதற்குப் பரவை, ஆழி, புணரி, ஆர்கலி, முந்நீர் என்பன போன்ற சொற்களும்; ஓடம், கலம், மரக்கலம், தோணி, மிதவை, கப்பல், நாவாய், மரம், திமில், அம்பி முதலிய கப்பல் வகை சொற்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. கடல் வணிகத்தில் சேரர்கள் அரபிக் கடலை அடிப்டையாகக் கொண்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். அவர்களைத் தொடந்து, பாண்டியர்கள் வங்காள விரிக்கூடா எனும் கடலை மையமாகப் பயன்படுத்தி வணிகம் செய்தவர்கள். பிற்காலத்தில் சோழர்கள் இவ்வனைத்தையும் செரிவாகப் பயன்படுத்தி வணிகத்தில் திழைத்தத்தோடு கடல் கொள்ளையிலிருந்து தமிழர்களின் வணிகத்தைக் காப்பாற்றிப் பெருக செய்தனர்.
கடல் வணிகம் செய்த நம் தமிழர்கள் கடல் போக்குவர்த்தில் வல்லமை மிகுந்தவர்களாக இருந்துள்ளனர். பர்மாவில் வெட்டிப் போடப்பட்ட தேக்கு மரங்கள் தாமகவே மிதந்து வந்து தனுஷோடியை அடைந்தன. இதனைக் கண்டு வியந்த நம் பழந்தமிழர்கள் கடல் நீரோட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். தோணி, படகு, கட்டுமரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கடல் வழி பயணம் செய்யத் தொடங்கினர். புயலினாலும் பெரிய கடலலைகளாலும் அவை பாதி வழியிலே சிதைந்து போயின. இதைக் கண்டு அஞ்சியனாலும் மீண்டும் கடல் கடந்து செல்லும் முயர்ச்சியில் ஈடுபடவே செய்தனர். அவர்களின் வெற்றிக்குக் கிடைத்ததே நாவாய் மரக்கலம். ஆலம் நிறைந்த கடலில் நாவாய் மூலம் வெகு தூரம் பயணம் செய்யலாம் என்பதைத் தமிழர்கள் கண்டறிந்தனர். இதனால், தமிழர்களின் வணிகம் கடல் கடந்து சென்றது.  மரப் பாகங்கள், பட்டைகள், போன்றவற்றைக் கொண்டு கப்பல் செய்வதில் திறன் மிகுந்தவர்கள் நம் பழந்தமிழர்கள்.  சிறிய அளவில் கப்பல் கட்ட ஆரம்பித்த நம் தமிழர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் பெரிய அளவிலான கப்பல் அமைக்கத் தொடங்கினர்.  அவையாவும் மூன்று டன் உடைய பொருள்களை ஏற்றிச் செல்லும் வகையில் கட்டப்பட்டது. தொடர்ந்து, சோழ காலத்தில் இதைக் காட்டிலும் பெரிய அளவிலான கப்பல்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவை, மரக்காணம் போன்ற சோழ நாட்டுத் துறைமுகங்களில் பெரிய கப்பல்களும், கட்டுமரங்களும் நிற்பதைச் சங்க இலக்கிய பாடல் வழி அறியலாம். இவ்விடங்களிலிருந்து நாவாய்கள் கரையோரமாகவே பாய்விரித்தோடிச் சேரநாட்டுத் துறைமுகங்களை அடைந்தன.  பல்லவர்கள் காலத்தில்தான் இரட்டைப் பாய் விரித்த கப்பல்களையும் வாணிகத்தில் ஈடுபடுத்தியிருந்தனர். வணிக வளர்ச்சிக்கு ஏற்ப கப்பலின் அளவும் நவீனமும் வளர்ந்தது.
மேலும், கடல் வழி பயணம் செய்வதற்குச் சரியான காலத்தையும் வழியையும் பழந்தமிழர்கள் கண்டறிந்தனர். இனப்பெருக்கக் காலத்தில் கடலாமைகள் கடல் நீரோட்டத்தில் சுமார் 200 நாட்கள் பயணிக்கின்றன. இதனைக் கண்டறிந்த நம் தமிழர்கள் கடல் வழி பயணத்திற்கான பாதையைக் கண்டுபிடித்தனர். வங்கக் கடல் வாசல் தொடங்கி மத்தியக்கரை வரையில் வணிக பாதையை அமைத்தனர். எனவே, விஞ்ஞான வளர்ச்சியில் இல்லாமல் இருந்த வேளையில் சரியான பாதையில் சென்று குறிப்பிட்ட நகரங்களை அடைந்தனர்.  ஆலமான ஆழிகடலில் பயணிக்கும் மாலுமிகளைப் பெருநீரோச்சநர் எனப் பாராட்டி பெருமிதம் கொண்டனர். பழங்காலத்தில் கப்பல்களில் பயன்படுத்திய மணி இன்றும் வெலிங்டன் எனும் நீயுசீலாந்தில் உள்ள அருங்காட்சியாகத்தில் தமிழ்மணி எனும் பெயரில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கடல்வழி நடந்த தமிழர் வணிகத்தில் துறைமுகங்கள் பெருமளவில் பங்கு வகித்துள்ளன. கடல் வழி வணிகம் செய்து மக்கள் துறைமுகத்தை உருவமைப்பதிலும் அங்கு பல வசதிகளை வடிவமைப்பதிலும் சிறந்து விளங்கியுள்ளனர். கடல் வழி வரும் வணிகர்களின் நலன், வசதியைக் கருதியும் தங்களின் வணிக வசதிக்கு ஏற்பவும் துறைமுகங்கள் நிர்வாகிக்கபட்டன. பண்டய காலத்தில் பாண்டியர்களின் கடல் வணிகத்தின் முக்கியத் துறைமுகமாகவும் பல வணிகப்பொருள்கள் நிறைந்திருந்த இடமாகவும் இழத்தில் இருந்த மன்னார் விளங்கியுள்ளது. மேலும், காவிரிப்பூப்பட்டினம் பழங்காலத்தில் உலகின் நவீன கப்பல் துறைமுகமாகத் திகழந்தது. பல இடங்களிலிருந்து வணிகப் பொருள்கள் அங்கு வந்து குவிந்தன என்று பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலக்கத்தின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான கிரகம் மான்போக் தனது கடலியியல் ஆராய்ச்சின் மூலன் காவிரிப் பூம்பட்டினத்தைப் பற்றிய சிறப்புகளை மெய்பித்துள்ளார். ஏற்றுமதி இறக்குமதி என இரண்டுமே அத்துறைமுகத்தில் பெரியதளவில் நடந்தது. மேலும், கி.பி.  எட்டாம் நூற்றாண்டில் தரகம்பாடி எனும் துறைமுகம் வழியான சீனா நாட்டுடனான வணிகத் தொடர்பைச் சீனா நாட்டுக் காசுகள் மூலம் அறியலாம்.
அதுமட்டுமின்றி, ரோமாபுரி ஆசிரியர்கள் எழுதிய நூல்களின் வழி தமிழகத்தின் துறைமுகங்களைப் பற்றி அறியலாம். தொண்டியைத் திண்டிஸ் என்று, முசிறியை முஸிரிஸ் என்றும், பொற்காட்டைப் பகரி என்றும், குமரியைக் கொமாரி என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. தொடக்கத்தில் 'உல்கு' என்று அழைக்கப்பட்டுப் பின்னர் 'சுங்கம்' என்றனர். அரசனுடைய ஆட்களே நடுநிலையிலிருந்து சுங்கம் வாங்குவார்கள். கி.பி 600 முதல் வணிகர்களின் இலாபத்தில் சிறு பங்கு அரசுக்குக் கொடுத்துள்ளனர். அதனை மகமை என்றனர். இவ்வரிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பக்க பலமாய் இருந்தன.
துறைமுகங்களின் அருகே பண்டசாலைகளை உருவாக்கியதும் பழந்தமிழரின் வணிக மேலாண்மையைக் காட்டும். 'பண்டசாலை' என்பது பண்டங்களைப் பத்திரமாகச் சேமித்து வைத்திருக்கும் இடமாகும். இன்று, அவற்றைக் 'கிடங்கு' என்கின்றனர்.  1615-ல் மன்னன் ஜஹாங்கீர் அரசவைக்கு கம்பெனியின் ஆட்கள் வந்து சூரத்தில் பண்டசாலை நிறுவுவதற்கு அனுமதி கேட்குப் பெற்றுக் கொண்டனர்.
சுங்கம் வசூலிப்பர்கள்தான் பண்டசாலைகளைக் காப்பார்கள். அச்சூழலைச் சங்க இலக்கியப் பாடல் ஒன்று அழகாக வர்ணிக்கின்றது.  பண்டசாலையைக்காக்க சுங்கம் வாங்குபவர்கள் நள்ளிரவில் காவிரியாற்று வெள்ளம் சூழ்ந்த மணல் மேட்டிலே உறங்குவார்கள். அவர்கள் உறங்கும் போதும் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாயிருப்பார்கள். அரசருடைய பண்டசாலைத்தெருவில் குவிந்திருக்கும் பொருள்களைப் பிறர் எடுத்துச் செல்லாமல் பாதுகாப்பர். அவர்கள் சுங்க வசூலிக்கக் சூரியன் தேரிற்பூட்டிய குதிரைகள் போல அயராது சுற்றி வருவார்கள். சளைக்காமல் வாங்க வேண்டிய சுங்கங்களை வாங்கிக்கொண்டே இருப்பார்கள் என்கிறார் புலவர். பண்டகசாலையின் சிறப்பைக் கூறிய புலவர் பண்டங்கள் எப்படிக் குவிகின்றன என்பதைப் பற்றியும் கூறுகிறார். அயல்நாடுகளிலிருந்து கப்பல் வழியாக வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள் வெளியே அனுப்புவதற்கு முன் பண்ட மூட்டைகளின் மேல் சோழனுடைய புலி முத்திரை இடப்படும். புலி முத்திரையிடப்பட்ட பண்டங்கள் மட்டுமே வெளியே போக முடியும். அரசருடைய மாண்பைக் காப்பதோடு சரியான கணக்கு எடுக்கவும் இஃது உதவியுள்ளது. இச்சூழல் அவர்களின் வணிக மேலாண்மையைக் காட்டுகின்றது.
பழந்தமிழர்கள் வணிகம் செய்வதற்குப் பல பொருள்களை உபயோகப்படுத்தினர். அரிசி, வரகு போன்ற வேளாண்மையில் விளைந்தவற்றைப் பாலைவனத்தில் உள்ள அரண்மனைகளுக்கு அனுப்பினர். கொங்கு நாட்டு தங்கம், பாண்டி நாட்டு முத்து, வாசனைப் பொருள்கள், மிளகு, இஞ்சி, ஏலம், கிராம்பு போன்ற கமல்வு பொருள்களையும் மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம் ஆகிய கட்டட மரவகைகள், எண்ணெய்கள், தேங்காய், கருப்பட்டி போன்றவற்றைகளும் வணிகப் பொருள்களாக விளங்கின. சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, புலி, வேட்டை நாய்கள் ஆகிய உயிரிங்களையும் தமிழர்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். பழங்காலத்தில் யானைத் தந்தங்களும் முத்துகளும் விலையுயர்ந்த பொருள்களாகத் திகழ்ந்தன.  தமிழகம் ஏற்றுமதி செய்த பொருள்களில் இலவங்கம், அரிசி, நுண்வகைக் கலிங்கங்கள், மரவகைகள் போன்றவை பெரியளவில் வணிகம் செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, இஞ்சியும் மிளகும் அயல்நாட்டில் பெரிதளவில் விற்பனையாயின. கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரேட்டஸ் எனும் கிரேக்க மருத்துவர் மிளகை மருந்தாகப் பயன்படுத்தியதோடு மிளகை இந்திய மருந்து என்றே குறிப்பிட்டிருக்கிறார். உயர்தரமான ஆடைகள், பட்டாடைகள், வண்ணப் பகட்டான ஆடைகள், விரிப்புகள், ஓவிய வேலைப்பாடுடைய பொருள்கள், வைரம், விலையுயர்ந்த கற்கள் போன்றவையும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
பழந்தமிழர் வணிகத்தில் நாணய பயன்பாடும் இருந்துள்ளது. அவை காசு எனும் பெயரில் அழைக்கப்பட்டுள்ளன. காசு எனும் சொல் பல பொருள்களில் சங்க இலக்கியங்களில் காணலாம். வேப்பம் போலும் நெல்லிக்காய் போலும் இருந்த காசுகள் அணிகலன்களாகவும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறியதாகவும் கோளவடிவிலும் இருந்த பொற்காசுகள்  வணிகத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு சிறு முத்திரைப் பதிவு மட்டும் அவற்றில் இருந்துள்ளன. சேர நாட்டுத் தலைநகரான கரூரில் சீனம், கிரேக்கம், உரோம், சிரியா, பொனிசியா போன்ற நாடுகளின் நாணயங்கள் கிடைத்துள்ளதாய் முனைவர் நா.மாரிசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.  நாணயத்தின் முன் பக்கத்தில் குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் மற்றும் யானை ஒன்றும் பொறிக்கப்பட்டுப் பின் பக்கத்தில் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சதுரச் செம்பு நாணயம் தாய்லாந்திலுள்ள இலுக்பாட் என்கிற பண்டைய துறைமுக நகரத்தில் கிடைத்துள்ளது. இந்த நாணயத்தின் காலம் கி.மு. 5ஆம் 4ஆம் நூற்றாண்டு வரையிலாகும் என்று முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள் கூறுகின்றார். எனவே, கி.மு 5-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் வணிகத் தொடர்பு தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.
வெளிநாட்டு வணிகம் மட்டுமின்றி, உள்நாட்டு வணிகமும் பழங்காலத்தில் இருந்தது.   தமிழர்கள் உள்நாட்டில் பொருள்களைத் தலையில் சுமந்து சென்று வீட்டு வாயிற்படியிலும் சந்தைகளிலும் விற்றனர்.  எருது, கழுதை போன்ற விலங்குகளின் மேலேற்றிக் கொண்டு சென்று வணிகம் செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. பழங்காலத்தில் உப்பு வணிகம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. உப்பு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் எருதுகள் வரிசையாகச் செல்லும் என்பதைக்நோன்பகட் டுமண ரொழுகையோடு வந்த” (55) எனும் சிறுபாணாற்று வரிகளில் காணலாம். அப்போது இருந்த தரைவழி வண்டிகளையும் வணிகத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். சான்றாக, அளங்களில் உப்பை வண்டிகளில் ஏற்றிச் சென்று வித்தனர். உப்பு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை உமணப் பெண்கள் செலுத்துவர். அவ்வண்டிகளின் இருபுறத்திலும் வண்டியின் அச்சு முறியாமலிருக்க உப்பு வணிகர்கள் பாதுகாத்து நடந்து வருவர். வண்டியை இழுத்துச் செல்லும்  எருது களைத்துப் போனால் பயணம் தடைப்படும் எனும் தெளிவு கொண்டிருந்த பழந்தமிழர்கள் மேலும் சில எழுதுகளை உடன் ஓட்டிச் செல்வர் என்பதைப் பெரும்பாண் 61-65 வரையிலான வரிகளில் காணலாம். உமணர்கள் உப்பு மட்டுமின்றி வீட்டிற்குத் தேவையான பொருள்களையும் உள்நாட்டிலேயே வெகு தூரம் வரையில் வண்டியில் ஏற்றிச் சென்று விற்பனை செய்வர் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அங்காடிகளிலும் வணிகம் செய்து உள்ளனர் நம் பழந்தமிழர்கள். வணிகம் செய்யும் கடைத்தெருவுக்கு 'ஆவணம்' என்பது ஒரு பெயர், 'அங்காடி' என்பது மற்றொரு பெயர். அவை நியமம் என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இவை பெருமளவில் நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பகல் நேரங்களில் நாளங்காடியும் இரவில் அல்லங்காடியும் செயல்பட்டன.  அங்காடிகளில் விற்பனை பொருள்களுக்கு ஏற்ப கொடிகள் பறக்கவிடப்பட்டன. இரவு நேரங்களில் கொடிகளுக்குப் பதிலாய் வண்ண விளக்குகளால் கடை அலங்கரிப்பட்டிருக்கும். புகார், மதுரை போன்ற நகரங்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். புகார் நகரத்தில் அமைக்கப்பட்ட அங்காடிகளைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலும் மதுரை நகரத்திலுள்ள அங்காடிகள் பற்றி மதுரை காஞ்சியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்காடிகளில் வளையல், மணிகள், பொன் நகைகள், பட்டு, பருத்தி, துணி, மண் பொம்மை, புடவை விற்பவர்கள், சித்திரம் வரைபவர்கள் என வணிக் குழுவே அமைந்திருக்கும் என பட்டினப்பாலையின் பாடல் வரிகளின் மூலம் அறியலாம். சமய நம்பிக்கைகளின் தீரா பக்தி கொண்டிருந்த நம் தமிழர்களிடம் வழிபாட்டு பொருள்களே உள்நாட்டு வணிகத்தில் பரவலாவிய நிலையில் இருந்தது.
     தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்குமிடையே கி.மு மூன்றாம்
நூற்றாண்டு முதல் வணிகம் நடைபெற்றள்ளது.தலைவன் பொருளீட்டத் தலைவியைப் பிரிந்து வடநாடுகளுக்குச் சென்று சில மாதங்கள் தங்கி வணிகம் செய்ததைச் சங்க இலக்கிய அகப்பாடல்களின் வழி நாம் அறியலாம். பாலை நிலத்துப் பாடலில் இச்செய்தி புலப்படும். கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ் வணிகர்கள் நேரடியாகச் சென்று அங்கு தங்கி வணிகம் செய்து வந்துள்ளனர் என்பதை சங்ககால அகப்பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்தசாத்திரமும் உறுதிப்படுத்துகின்றன. சில பொருள்கள் கடல் வழியே வடநாட்டைச் சென்றடைந்தன.
அயல்நாட்டினர் மன்னர்களிடம் மண்டியிட்டு மரியாதை செலுத்தி வியாபாரத்திற்கு அனுமதி பெற்றுக் கொண்டனர். கி.பி.1600-ல் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அனுமதியில் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவில் வணிகம் செய்தனர். வணிகர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து உள்நாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகம் என ஈடுபட்டிருந்தனர். இடைக்காலத்திற்கு முன்னிருந்து வணிகர்கள் சங்கங்கள் அமைத்து வணிகம் நடத்தினர். அவை, மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார், குதிரை வணிகர்கள், நானா தேசிகள் போன்றவைகளாகும். முத்து வணிகர்களின் சங்கம் மணிக்கிராமம் எனவும், காயல்பட்டின முஸ்லீம் வணிகர்களின் சங்கம் அஞ்சு வண்ணம் எனவும், குதிரை வாணிபம் செய்த முஸ்லீம் வணிகர்களும் குதிரை செட்டிகளின் சங்கம் குதிரை வணிகர்கள் எனவும், அயல்நாட்டு வணிகர்கள் நானா தேசிகள் எனவும் குறிப்பிடப்பட்டனர். வாணிப சங்கங்களின் பணிகளைத்தாமிழிகல்வெட்டுகளில் காணலாம். வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள் நகரத்தார்களாவர்
 
முடிவுரை
பழந்தமிழர் உள்நாடு வெளிநாடு என உலகளாவிய நிலையில் வணிகத்தில் சிறந்து விளங்க பல வழிகளைப் பயன்படுத்தியுள்ளனர். பல தோல்விகளைத் தாங்கி தொடர் முயர்ச்சியாலும் நம்பிக்கையாலும் உயர்ந்தவர்கள் தமிழர்கள் என்று சொல்லி பெருமிதம் கொள்ளலாம். எவ்வழியிலும் பொருளீட்டில் விடலாம் என்று நினைக்காமல் தமக்கென ஒரு சரியான வழிமுறை வகுத்து அதனைப் பின் தொடர்ந்து பல அரிய வெற்றிகளை வணிக தளத்தில் குவித்துள்ளனர். இன்றளவும் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பது யாராலும் மறுக்க இயலாது.


மேற்கோள்கள்
செல்வம் வே.தி. (2009) தமிழக வரலாறும் பண்பாடும், மாணிக்கவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை
தட்சிணாமூர்த்தி. (2005) தமிழர் நாகரீகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, சென்னை